வட இந்திய முஸ்லீம்கள்
மத்தியில் சோஷலிச சிந்தனை (1917-47)
ஆக்கம்: கிசார்
ஹூமாயூன் அன்சாரி
(ஃப்ரண்ட் லைன்
ஆங்கில மாதமிருமுறை ஏட்டில் வெளியான ஏ.ஜி நூரணியின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
லண்டன் பல்கலைக்
கழகத்தில் இஸ்லாம் மற்றும் பண்பாட்டு பன்முகத் துறையின் தலைவர் பொறுப்பில் இருக்கும்
பேராசிரியர் அன்சாரியின் இந்நூல் மிக ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவு.
பொதுவாகவே முஸ்லீம்கள்
சிந்தனையில் சோஷலிசம் வேரூன்றி இருக்கிறது எனலாம். இஸ்லாமிய நாடுகளில் சர்வாதிகாரத்திற்கெதிராக
நடத்தப்பட்ட போராட்டங்கள், அடித்தட்டு மக்கள் மீது கரிசனை, அவர்களுக்காகவென பைத்துல்
மால் என்றறியப்படும் நிதி எனப் பல அம்சங்களை இஸ்லாமிய சோஷலிசம் பேசுவோர் முன் வைத்திருக்கின்றனர்.
முஸ்லீம் சோஷலிஸ்டுகளின்
படைப்புக்கள் இதுகாறும் இலக்கியமாகவே அணுகப்பட்டுவந்திருக்கிறது. மாறாக அரசியலில் அவற்றின்
இடம் விவாதிக்கப்படவே இல்லை. அந்த வெற்றிடத்தை அன்சாரியின் நூல் சிறப்பாகவே நிரப்புகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவில்
எந்த வகையிலான முஸ்லீம்கள் சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டனர், எத்தகைய சிந்தனைகளை அவர்கள்
ஏற்றுக்கொண்டனர், எப்படி அவர்கள் செயல்பட்டனர் என்பதையெல்லாம் பேராசிரியர் அன்சாரி
விவரிக்கிறார்.
1917-47 இந்த மூன்று
தசாப்தங்களில்தான் முஸ்லீம் சோஷலிஸ்டுகள் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டனர், அவர்களுக்கென்று
தனியோர் செல்வாக்கும் இருந்தது.
அப்போது முஸ்லீம்
சமூகத்தின் அறிவுத் தளத்தில் பல புதிய போக்குக்கள் மலர்ந்தன. மௌலானா ஷிப்லி நோமானி
(1857-1954) ஓர் ஆலிம். ஆயினும் சயீத் அஹமத் கானின் நவீன சிந்தனைகள் அவரைக் கவர்ந்தன.
அலிகர் பேராசிரியர் ஆர்னால்டிடம் இலக்கிய விமர்சனம், வரலாற்றியல் உள்ளிட்டவற்றைக் கற்றறிந்தார்.
மேற்குலக வரலாற்றாசிரியர்களுக்கு இருந்த பாரபட்சமற்ற தன்மை முஸ்லீம் அறிஞர்களிடம் இல்லை
என வருந்தினார் அவர்.
வரலாறு என்பது
பேரரசர்களின் வாழ்க்கை மட்டுமில்லை, அந்தந்தக் காலகட்ட சமூக அமைப்புக்கள், பண்பாடு
மற்றும் ஒழுக்க நெறிகளும் ஆழமாக ஆராயப்படவேண்டும் என நோமானி வலியுறுத்தினார்.
ஓரிறைக் கொள்கையினை
நிலைநாட்டவும் பல கடவுளரைத் தொழுவதைத் தடுக்கவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1908ல் மேற்கொண்ட முயற்சிகளை
வரவேற்ற நோமானி, ஒரு சில ஆண்டுகளிலேயே கடும் பிரிட்டிஷ் எதிர்ப்பாளராய் மாறினார்.
இந்த ஷிப்லி நோமானிக்குத்தான்
அஞ்சலி செலுத்த அலிகர் பல்கலைக் கழகம் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த்து.
ஆனால் மோடி அரசோ அதில் பங்கேற்க பாக் பேராசியர்களுக்கு விசா வழங்க மறுத்தது.
முஸ்லீம்கள் கம்யூனிஸ்ட்
கட்சிகள், அவற்றின் அமைப்புக்கள் பலவற்றில் உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
இஸ்லாத்தில் துவங்கி
சோஷலிஸ்டுகளான பலரது வாழ்க்கைக் குறிப்புக்களும் இப்புத்தகத்தில் அடங்கும். பத்திரிகையாளர்,
அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர் என ஒருவரை விடாமல் அனைவரைப் பற்றிய தகவல்களையும் சுவைபட
அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
அலிகர் முஸ்லீம்
பல்கலைக் கழகத்தில் கூட சோஷலிச ஆர்வலர்கள் தீவிரமாக இயங்கினர்.
ரௌலத் சட்டத்திற்கெதிராக
அமிர்தசரஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் சைஃபுத்தீன்
கிச்லூ அப்பல்கலைக் கழகத்தில் பயின்றவர்தான், அவர் பகத் சிங்கை ஆதரித்துக் குரல் கொடுத்ததார்.
பாகிஸ்தான் பிரிவினையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மிக எளிமையானவர். ஸ்டாலின் அமைதிப்
பரிசை நிராகரித்தார். பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்த அவர் மிக வறியவராகத்தான்
இறந்தார்
மௌலானா ஹஸ்ரத்
மோஹானி, அப்துல் கஃபார் காஜி, அலி சர்தார் ஜாஃப்ரி, ஜன் நிசார் அக்தர், ரஃபி அஹ்மத்
கித்வாய், கே.எம்.அஷ்ரஃப், இஸ்ராவுல் ஹக் மஜாஸ், சதத் ஹாசன் மாண்டோ, சகீர் நிசாமி,
இஸ்மத் சுக்தாய், பேராசிரியர் முகம்மது ஹபீப்....இப்படி நீள்கிறது அலிகர் சோஷலிஸ்டுகளின்
பட்டியல்.
இவர்களில் பலரை
இந்தியா மறந்தே போய்விட்டது. காங்கிரஸ்காரர்கள் வாய் திறப்பதில்லை.
காங்கிரசில் இருந்த
சோஷலிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டது, இந்தியாவில் தீவிர முஸ்லீம் மதவாதம் வளர்ந்தது இவற்றின் பின்னணியில்
இந்து மதவாதிகளிடம் ஜவஹர்லால் நேரு தோல்வியடைந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.
அகில இந்திய காங்கிரசின்
தலைவராக நேரு இருந்தபோது, 1937ஆம் ஆண்டில் முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெறும்வகையில்
பொதுமக்கள் தொடர்பு இயக்கம் ஒன்றைத் துவங்கினார்.
துவக்க காலத்தில்
அது பெரும் வரவேற்பையும் பெற்றது. முஸ்லீம் லீகினரே மிரண்டுபோயினர். அலிகர் பல்கலைக்
கழகத்தில் 1936ஆம் ஆண்டு நடந்த ஒரு பெரும்
மாணவர் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள்தான் தலைமை தாங்கினர்.
![]() |
| (அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து வலம்: பாபுராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல், ஆச்சார்ய கிருபளானி) |
இந்தப் பின்னணியில்தான்,
காங்கிரசில் முஸ்லீம்களின் தாக்கம் அதிகரிப்பதை விரும்பாத சில இந்து மதவாதத் தலைவர்கள்
நேருவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைபோட்டனர். அன்று கட்சியின் பொதுச் செயலாளர் கட்சியில்
மதவாத சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாகவே விளங்கிய ஜே.பி.கிருபளானி. அவர், பாபு ராஜேந்திர
பிரசாத் மற்றும் கோவிந்த் வல்லப பந்த், வல்லபாய் படேல் எல்லோரும் இணைந்து, நேரு துவக்கிய
பொதுமக்கள் தொடர்பு இயக்கத்தை முறியடித்தனர். நேருவின் அந்தத் தோல்வி காங்கிரசில் இருந்த
முஸ்லீம் சோஷலிஸ்டுகளுக்கும் பெரும் பின்னடைவாய் அமைந்தது.
(பின்னாளில் பந்த்
உ.பி. முதல்வராக இருந்தபோதுதான் திடீரென்று ராமர் சிலை பாபர் மசூதியில் தோன்றியது.
நேரு எவ்வளவு சொல்லியும் அச் சிலை அப்புறப்படுத்தப்படவே
இல்லை.)
காங்கிரசில் இயங்கிய
முஸ்லீம் சோஷலிஸ்டுகள் கதை அத்துடன் முடிந்ததென்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக்
கண்மூடித்தனமாக ஆதரித்த முஸ்லீம்களுக்கு, நாட்டில் கம்யூனிச இயக்கத்திற்கேற்பட்ட அதே
கதிதான், அதோ கதிதான். அவர்கள் சமூகத்தில் அவர்களுக்கு பெரிதாக அங்கீகாரம் ஏற்பட்டுவிடவில்லை.
![]() |
| சதத் ஹசன் மாண்டோ |
இந்தியாவிலேயே
இப்படி என்றால் பாகிஸ்தானில் என்ன நடந்திருக்கும் என்பதை நாம் எளிதில் ஊகிக்கலாம்.
இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அந்நாட்டில் மதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருக்கும்
என்பதை அங்கு குடியேறிய இடதுசாரிகள் உணரவில்லை. அதுவே அங்கு அவர்களது தோல்விக்குக்
காரணமாய் அமைந்தது.
“முஸ்லீம் சோஷலிஸ்டுகளின்
அரசியல் ரீதியான தாக்கம் குறைவே. ஆயினும் இலக்கிய தளத்தில் அவர்கள் பெரிதும் போற்றப்பட்டார்கள்.
நடையிலும் சரி உள்ளடக்கத்திலும் சரி பல புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி உருது இலக்கியத்தை
செழுமைப்படுத்தினர் அவர்கள்,” என்கிறார் அன்சாரி.
முஸ்லீம்கள் என்றாலே
பாகிஸ்தான், தொழுகை, இப்போது தீவிரவாதம் என்பதே பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்ட
நிலையில், முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் சமூக சோஷலிச முன்னோடிகளைத் தெரிந்து கொள்ள உதவும்
நூல் இது.
இதைப் போலவே தென்னிந்திய
முற்போக்கு முஸ்லீம்கள் குறித்து தரவுகள் சேகரித்து நூல் எவரேனும் எழுத முன்வந்தால் நலம்.




